தமிழகம்

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: பதில்மனு தாக்கல் செய்யாதவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் “இவர்கள் 11 பேரும் அதிமுக அனுதாபிகள். அதிமுக வழக்கறிஞர் அணியில் உள்ளவர்கள். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் இடமளிக்கவில்லை. இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டள்ளது” என்று கூறி திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர், கவர்னரின் செயலாளர் ஆகியோர் மார்ச் 31-ம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன், ‘டிஎன்பிஎஸ்சி-யின் வரலாற்றிலேயே இப்படியொரு நியமனம் இதற்கு முன் நடந்ததில்லை. தேர்ந்த கல்வியாளர் கள் யாரும் இக்குழுவில் இடம்பெற வில்லை. கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்ட மாவட்ட நீதிபதி ஒருவரும் தற்போது டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர்களின் நியமனம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்துள்ளார். மற்றவர்கள் யாரும் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை. எனவே டிஎன்பிஎஸ்சி-க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர், கவர்னரின் செயலாளர் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில்மனு தாக்கல் செய்ய விரும்பினால், ரூ. 5 ஆயிரம் அபராதத்தை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் செலுத்திவிட்டு பதில்மனு தாக்கல் செய்யலாம். மேலும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தன்னை விடுவிக்க கோரியுள்ளதால், வரும் ஜூன் 13 அன்று நடக்கும் விசாரணையில் வேறு ஒரு நீதிபதி தலைமை நீதிபதியுடன் இந்த வழக்கை விசாரிப்பார், என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT