தமிழகம்

தாம்பரம் உள்ளிட்ட 3 மாநகராட்சிகள் திமுக வசம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: சென்னை புறநகரில் உள்ள தாம்பரம்,ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது .

தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

70 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில், 7 லட்சத்து 77 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 834 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனையில் 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 163 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 683 பேர் களத்தில் இருந்தனர்.

70 வார்டுகளில் திமுக 58 வார்டுகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 12 வார்டுகளிலும் போட்டியிட்டன. அதிமுக 67 வார்டுகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள், 3 வார்டுகளிலும் போட்டியிட்டன.

மொத்தம் 703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் 75 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டன. அவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

3 லட்சத்து 98 ஆயிரத்து 971 பேர் வாக்கு (51.29%) செலுத்தினர். வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையான, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 400 ஊழியர்கள் ஈடுபட்டனர். 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 8 மணிக்குமாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான இளங்கோவன் தலைமையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடர்ந்து 10:14 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 7 வார்டுகள் என்ற அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலாவதாக 1,11,21,31,41,51,61 ஆகிய ஏழு வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியாக 10,20,30,40,50,60,70, ஆகிய வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை மையத்தை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் திமுக-48, அதிமுக-8, காங்கிரஸ்-2, விடுதலை சிறுத்தைகள்-1, மதிமுக-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1, மமக-1, தமாக-1, சுயேச்சை-7 பெற்றுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதோடு, முதல் பெண் மேயரையும்அமர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT