வேலூர் மாநகராட்சி 18-வது வார்டில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமதி மனோகரன். 
தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக

செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளருக்கு நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பாஜக 35 வார்டுகளில் தனித்து போட்டி யிட்டது. இதில், 18-வது வார்டில் போட்டியிட்ட சுமதி மனோகரன் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். தபால் வாக்குகள் முடிவில் அவர் 145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி திமுகவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சலசலப்பு காரணமாக பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தகவலால் அதிர்ச்சி யடைந்த பாஜகவினர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இடைவெளிக்குப் பிறகு 18-வது வார்டில் பாஜக வேட்பாளர் சுமதி மனோகரன் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரிய திமுக, மதிமுகவினரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய விதி களின்படி தபால் வாக்குகள் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என கூறிவிட்டனர். இரண்டாவது தேர்தலை சந்திக்கும் வேலூர் மாநகராட்சியில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT