சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து 6 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சுந்தர், நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் திருமலைச்சாமி, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ராபர்ட்சன், விவசாய அணி செயலாளர் மிராசு, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சோனா மகேஷ் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் திருவாடானை பிரபு சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகியதாக பத்திரிகைகளில் வந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.