சென்னை: வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய கலாச்சார உறவுகள் கழகம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்று 75-வதுஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சி களை நடத்தி வருகிறது. அதன்படி,மத்திய வெளியுறவுத் துறையின்இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான கழகம் (ஐசிசிஆர்) சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபா கலை யரங்கத்தில் 75-வது சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பத்மபூஷன் விருது பெற்ற மிருதங்க வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவில் வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற கலாச்சாரமே சிறப்புத் தன்மை கொண்டது. ராமாயணம், மகாபாரதம், புத்தர், அசோகர், நாளந்தா பல்கலைக்கழகம் என மிக நீண்ட கலாச்சாரம் நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் உள்ள நடராஜர் கோயில், கலைக்கு மிகத் தொன்மையான எடுத்துக்காட்டாகும்.
எங்கு திரும்பினாலும் கலைகள்
முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டிடக் கலை சிறந்து விளங்கியது. இமயமலை, பாலைவனம், கடல் என அனைத்து வகையான நில அமைப்புகளைக் கொண்டஇந்தியாவில் எங்குத் திரும்பினாலும் கலைகள் மட்டுமே உள்ளன. சிறப்பு வாய்ந்த கலைகளை நமதுசுதந்திர தினவிழாவில் முன்னிலைப்படுத்தும் ஐசிசிஆருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விழாவில், பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார், வெளியுறவுத் துறையின் குடியேற்றப் பிரிவு சென்னை அலுவலக செயலாளர் வெங்கடாசலம் முருகன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கேவிஎஸ் கோபாலகிருஷ்ணன், நகரச் சபா கூட்டமைப்பின் செயலாளர் கே.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஐசிசிஆர் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் கலைமாமணி பிரகாஷ் எம். சுவாமி வரவேற்றார். ஐசிசிஆர் மண்டல இயக்குநர் முகமது இப்ராகிம் கலீல் நன்றியுரை வழங்கினார்