சென்னை: அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, மேரிலாண்ட் மாநில வெளியுறவுத் துறை முன்னாள் துணைஅமைச்சர் ராஜன் நடராஜன் சந்தித்தார். அப்போது, ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராஜன் நடராஜன் கூறியதாவது: வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ‘புலம்பெயர்ந்தோர் நாள்’ என அரசு அறிவித்துள்ளது மிகவும்மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற வெளிநாடுகளில் வாழ்பவர்கள் உதவி புரிவோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகஅளவில் தமிழகம் வர உள்ளனர். முதலீடுகள் தொடர்பாக தொழில் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ராஜன் நடராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற வெளி நாடுகளில் வாழ்பவர்கள் உதவி புரிவோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் தமிழகம் வர உள்ளனர்.