சென்னை: வாக்குச்சாவடிக்குள் அத்துமீறியதாக கூறி திமுக நபரை சட்டையைக் கழற்ற வைத்துஅரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்தது. சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்குள் நரேஷ் என்பவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இவர் திமுகவைச் சேர்ந்தவர் என கூறி சத்தம் போட்ட அதிமுகவினர், நரேஷ் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டினர்.
பின்னர் அவரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே நரேஷை சிலர் தாக்கினர். அவரது கையை கட்டும்படி ஜெயக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, அந்த நபரின் சட்டையை கழற்றி கைகளை கட்டினர். அவரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நரேஷை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து காயம் அடைந்த நரேஷை போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் அத்துமீறி நுழைதல், அரை நிர்வாணப்படுத்தி அடித்தல், குழப்பம் ஏற்படுத்துதல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஜெயக்குமாரின் மனைவி கூறும்போது, ‘‘வீட்டில் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது 30-க்கும் மேற்பட்ட போலீஸார் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தனர். என் கணவரை கைது செய்வதாக கூறினர். அவர் கட்டியிருந்த லுங்கியைக்கூட மாற்றவிடாமல் அழைத்துச் சென்றுவிட்டனர். இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைதான்’’ என்றார்.
இதனிடையே, ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகநாதன், போலீஸாரிடம் அளித்த புகாரில் தன்னை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 10 பேர் என்று குறிப்பிட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, புது வண்ணாரப்பேட்டை யில் ஆர்.கே.நகர் திமுக எம்எல்ஏ எபினேசர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சக்திவேல் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.