தமிழகம்

கட்சிக்காக கலையை அர்ப்பணிக்கிறோம்: அரசியல் மேடை ஆடல் பாடல் நடனக் குழுவினர் நெகிழ்ச்சி

என்.முருகவேல்

சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் மெல்ல சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.இந்தத் தருணத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்களைக் காட்டிலும் மேடை நடனக் குழுவினர்களே பிஸியாகியுள்ளனர்.

முன்னதாக, மிதமிஞ்சிய ஒப்பனைகளுடனும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்று அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை, கேபரே டான்ஸ், டிஸ்கோ டான்ஸ், ரெக்கார்ட் டான்ஸ், ஆடலும் பாடலும் என பல பெயர்களில் அழைத்தனர்.

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட டான்ஸ்களைப் பார்க்கவேண்டும் என்றால், முக்காடு போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து பயந்து பார்க்கவேண்டும். கோயில் திருவிழா உட்பட எங்கும் எதிலும் இது இல்லாமல் இருந்ததில்லை.

ரெக்கார்டு டான்ஸ் என்றால் எளிதில் புரியக்கூடிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கோயில் திருவிழாக்களிலும், இரண்டாம் தர உணவகங்களில் நடத்தப்பட்டுவந்தது. பின்னர் சில அரசியல் கட்சி மேடைகளிலும் தலைதூக்கியது. இதனால் சில இடங்களில் வன்முறைகளும் அரங்கேறியது. இதையடுத்து கடந்த இரு வருடங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதில்லை.

தற்காலச் சூழலில் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் செல்வது அரிதாகிவிட்ட காரணத்தால், அரசியல் கட்சிகள் சார்பில் கிராமங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்படும் நிலை உருவாகிவிட்டது. இந்தச் சூழலில் தான் , கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது என்பது இன்றியமையாததாகிவிட்டது.

திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள்,தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலை நிகழ்ச்சிகளை நடத்திவருவது தமிழக மக்கள் நன்கு அறிவர்.

அந்த வகையில் அதிமுக மேடைகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திவரும் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வெற்றி நமதே என்ற கலைக் குழுவின் நடனக் கலைஞர் அழகு செந்தாமரை, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''எனது தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவினர்கள் இதே தொழிலை தான் செய்துவந்தனர்.எங்கள் தாய் தந்தையர் அதிமுக நிகழ்ச்சிகளில் தான் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். தற்போது நான் எனது மனைவி, மகள், மகன், சகோதரர் உள்ளிட்ட 12 பேர் பரம்பரையாக ஆடல் பாடலில் ஈடுபட்டு வருகிறோம். என்னுடைய 15 வயதில் தொடங்கி கடந்த 42 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

18 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் திருவிழா, தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல் உள்ளிட்ட வேடங்களை புனைந்து நடனங்கள் ஆடி பாடி ரசிகர்களை மகிழ்வித்தோம்.எனது முக அமைப்பு சற்று எம்ஜிஆரை ஒட்டி இருந்ததால் அதற்கே நான் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன். அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பேன், கைக் கடிகாரம் அணிதல்,அடிக்கடி புருவத்தை உயர்த்துதல், முகத்தை மூடிக் கொண்டு அழுதல் போன்ற சின்ன விஷயங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டு மேடைகளில் ஆடிப்பாடி ரசிகர்களை ஈர்த்து வந்தோம்.

(அதிமுக மேடையில் நடனமாடும் வெற்றி நமதே கலைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள்)

பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களையே நாங்கள் குழுவில் இணைத்துக் கொள்வது வழக்கம். அப்போது தான் சில கட்டுப்பாடுகளை நாங்கள் பின்பற்ற முடியும், தொடர்ந்து பரம்பரையாக இத் தொழிலை செய்துவருவதால் எங்களுக்குள் கூச்சம் இருக்காது. இருப்பினும் மேடையின் பின்புறம் எங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பெண் கலைஞர்களுக்கான உடைமாற்றும் அரங்கு போதிய பாதுகாப்பின்றி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தும்.

பெரும்பாலும் அதிமுக நிகழ்ச்சிகளே பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வந்ததால், அதிமுக தலைமைக் கழகத்தில் பதிவு பெற்ற கலைக்குழுவானோம். தலைமைக் கழகத்திலிருந்து எங்களுக்கு தகவல் வரும். அதனடிப்படையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறோம். கட்சிக்காக எங்களது கலையை அர்ப்பணித்துள்ளோம்.ஆளும் கட்சியாக இருக்கும் போது கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களது வருமானம் இரட்டிப்பாக இருக்கும்.

ஆடல்பாடல் என்ற ரெக்கார்டு டான்ஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடம் நேரடியாக நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் சில விஷமர்களால் ஆபாசம் அதிகரித்தது. அதனால் கோயில் திருவிழாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து. தற்போது நாங்களும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறோம். எங்களுக்கென மாநில அளவில் தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் சங்கம் என்று உருவாக்கியிருக்கிறோம்.

எனவே மேடை நடனங்களில் யாரும் ஆபாச நடனங்கள் ஆடுவது தவிர்க்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். யாரேனும் ஆபசாமாக நடனம் ஆடுவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக நாங்களே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த நடன நிகழ்ச்சியை ரத்து செய்ய பரிந்துரைத்து வருகிறோம்'' என்றார்.

SCROLL FOR NEXT