தமிழகம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

செய்திப்பிரிவு

மேடவாக்கம்: சென்னை மேடவாக்கம் அருகே சித்தாலப்பாக்கத்தில் நாளை (பிப்.23) ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தைக் கடந்த ஆக.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவுமற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தால் இதுவரை மொத்தம் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் அருகேஉள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வரும் பிப்.23-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்குத் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்துபெட்டகத்தை வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து மொத்தம் 188 அவசர கால ஊர்திகளின் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதேபோல், ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48' திட்டத்தின்கீழ் பயனடைந்த 20 ஆயிரம் பயனாளிகளின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்வில் முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT