புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர், பட்டயம், சான்றிதழ், அயல்நாட்டிற்கான கோடை வகுப்பு, தமிழ் அறியா அரசு அலுவலர்களுக்கு தமிழ் கற்பித்தல் மற்றும் இதர கல்வி சார் பணிகளை மேற்கொள்ளும் விதமாக கடந்த 1986-ம் ஆண்டு முதல் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய பேராசிரியர்கள், மாணவர்கள் இல்லாமல் பெயரளவில் செயல்படுவதாக அனைவரும் குறிப்பிட்டனர். இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்து கிடைத்த தகவல்களை கொண்டு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:
கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளுக்கு மாணவர்கள் இன்றியும், பிற அனைத்து கல்வியாண்டுகளிலும் மிக சொற்ப அளவிலான மாணவர்களைக் கொண்டும் இயக்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1.17 கோடி ஊதியம் பெற்று பணிபுரிந்து வந்த 87 ஆராய்ச்சி உதவியாளர்களும் கடந்த 2007 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலங்களில் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது ஒரே ஒரு பேராசிரியர் மற்றும் 11 நிர்வாக பிரிவு ஊழியர்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ரூ.1,19,08,032 ஊதியம் பெற்றுக்கொண்டு 11 நிர்வாக பிரிவு ஊழியர்களுக்கும், ஒரு பேராசிரியருக்கும் இந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள பணி தான் என்ன? என்று தெரியவில்லை.
கடந்த 36 ஆண்டுகளாக பேராசிரியர்களுக்கு ஊதியம், நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு ஊதியம் என ரூ.72.91 கோடி அரசு செலவு செய்தும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழே தெரியாத நிலையில், இந்நிறுவனம் மூலம் 36 ஆண்டுகளாக எத்தனை அதிகாரிகளுக்கு தமிழ் கற்பித்துள்ளனர் என்று தெரிவிக்க வேண்டும். தற்போது அனைத்து ஆராய்ச்சி உதவியாளர்களும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு பேராசிரியரையும், நிர்வாகப்பிரிவு ஊழியர்களையும் வேறு துறைக்கு மாற்றம் செய்துவிட்டு கோடிக்கணக்கில் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். என்று குறிப்பிட்டார்.
இங்கு படித்தவர்கள், தமிழறிஞர்களிடம் விசாரித்தபோது, “இந்நிறுவனம் மானிடவியல் இலக்கியம், பண்பாடு, கவிதை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளது. 26 அறக்கட்டளை இருக்கைகள்அமைக்கப்பட்டு சொற்பொழிவுகளும் நூல்களாக்கப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படவேண்டிய இந்நிறுவனம் கலைப் பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படுவதுதான் விநோதம். இங்கு 12 பேராசிரியர்கள் இருந்தனர். பேராசிரியர்கள் ஓய்வு பெற்றபோது யாரையும் நிரப்பாமல் துறையினர் காலம் தாழ்த்தினர். மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சொசைட்டியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிவிடலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. அதுதான் முக்கிய பிரச்சினையாகிவிட்டது. மொழிப்பெயர்ப்பு திறனுடன் தமிழில் எம்.பில்., பி.எச்.டி., ஆய்வு படிப்பை முடித்துவிட்டு ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் பேராசிரியர்களை நிரப்பியிருந்தால்கூட இந்நிறுவனம் முழுமையாக செயல்பட்டிருக்கும்” என்று குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பிரகதி பொறுப்பேற்றுள்ளார். அவர் முதல்வர் ரங்கசாமியை நேற்று மரியாதை நிமித்தாக சந்தித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 36 ஆண்டுகளாக பேராசிரியர்களுக்கு ஊதியம், நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு ஊதியம் என ரூ.72.91 கோடி அரசு செலவு செய்தது.