தென் தமிழகத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்சுழி, பெருநாழி, சாயல்குடி, மறவர் பெருங்குடி போன்ற பகுதிகளில் வெங்காயம், மிளகாய் அதிகம் பயிரிடப்படுகிறது. மிளகாய் வகைகளில் குண்டு மிளகாய் தான் மானாவாரி கரிசல் நிலத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குண்டு மிளகாய் மகசூல் எதிர்பார்த்த பலனை தராததால் விவசாயிகள் சோர்ந்துபோய் உள்ளனர்.
இந்தாண்டு அதிக மழையால் சேதமடைந்த பயிர்களை அழித்து, மீண்டும் உழவுசெய்து விதைத்தனர். ஆனால், அதன் பின்னர்போதிய மழையில்லாததால் ஈரப்பதமின்றி மிளகாய் செடிகள் வாடின. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை அதிகமாக கிடைக்கும் நிலையில், விளைச்சல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய் பயிரை நம்பி ஏராளமான விவசாய குடும்பங்கள் உள்ளன. மிளகாய் விதைப்பு செய்து பூ பூக்கும்வரை ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்தாண்டு இடைவிடாது அதிகளவு மழை பெய்ததால், மானாவாரி பயிர்கள் சேதமடைந்தன. இதில், குண்டு மிளகாயும் தப்பவில்லை. சேதமடைந்த மிளகாய் பயிர்களை அழித்துவிட்டு மீண்டும் விதைத்தோம். ஆனால், அதன் பின்னர் தேவையானபோது மழையில்லாததால் மிளகாய் செடிகள் போதிய ஈரப்பதமின்றி காய்ந்துவிட்டன. இதனால் ஏக்கருக்கு 3 முதல் 5 குவிண்டால் வரை மகசூல் கிடைத்த நிலைமாறி, கிலோ அளவிலேயே விளைச்சல் உள்ளது. தற்போது சந்தையில் குவிண்டால் ரூ 40 ஆயிரம் விலைபோகிறது. விலை இருந்தும் விளைச்சல் இல்லாமல் போய்விட்டது.
கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்களில் கடந்த 2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடானது வெங்காயம், கொத்தமல்லிக்கு மட்டும் கிடைத்துள்ளது. மிளகாய்க்கு இன்னும் பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.