மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் ஓர் இடத்தை காலியாக வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் மானஷா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளேன். கடந்த 2018-ல் சென்னையில் எம்பிபிஎஸ் முடித்தேன். 2021- 2022 ஆண்டிற்கான முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் 335 மதிப்பெண் பெற்றேன். இதனால் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தேன்.
இந்நிலையில், என் விண்ணப்பத்தை என்ஆர்ஐ கோட்டாவில் இருந்து நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியுள்ளனர். என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கான கட்ஆப் மதிப்பெண்ணாக 265 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை விட கூடுதலாகவே நான் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனவே, எனது விண்ணப்பத்தை நிர்வாக ஒதுக்கீட்டில் இருந்து என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கு மாற்றவும். எனக்காக என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடங்களில் ஓர் இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், "பிப். 25-ல் நடைபெறும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் மானஷா பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அவருக்காக என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடத்தில் ஓர் இடத்தை காலியாக வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 1-க்கு ஒத்திவைத்தார்.