சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில், பல்வேறு இடங்களில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக தொண்டர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.