மயிலாடுதுறை: சீர்காழி அருகே தனியார் இறால் தீவன தொழிற்சாலையில் நேற்று பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த விசாரணை நிறைவடையும்வரை தொழிற்சாலையை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இறால் தீவன தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு வழக்கம்போல தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் வெப்ப அழுத்தம் காரணமாக நீராவி பாய்லர் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அருண்ஓரான்(22), பல்ஜித்ஓரான்(23) ஆகியோர் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் ரகுபதி மற்றும் தொழிலாளர்கள் மாரிதாஸ், ஜாவித் ஆகியோரை சக ஊழியர்கள் மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், ஆபரேட்டர் ரகுபதி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்த ஆட்சியர் லலிதா, உடனடியாக தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், இந்த விபத்து குறித்த விசாரணை முடியும் வரை தொழிற்சாலையை மூட ஆட்சியர் உத்தரவிட்டார்.\