தமிழகம்

செங்கோட்டையன் தொகுதியிலுள்ள கோபி நகராட்சியை தக்க வைக்குமா அதிமுக?

செய்திப்பிரிவு

கோபி நகராட்சியில் 3 முறை தலைவர் பதவியைக் கைப்பற்றிய அதிமுக, 4-வது முறையும் வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தமுள்ள 48 ஆயிரத்து 247 வாக்காளர்களில், 35 ஆயிரத்து 141 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது 72.84 சதவீதம் வாக்குப்பதிவாகும்.

கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001-ம் ஆண்டு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த கந்தவேல்முருகனும், 2006 மற்றும் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரேவதிதேவியும் தலைவர் பதவியை வகித்துள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தலைவர் பதவி அ.தி.மு.க வசமே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போதும் அதிமுக தலைவர் பதவியைத் தொடர வேண்டுமானால் அதிக வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் கோபி தொகுதி, அதிமுகவின் கோட்டையாக இதுவரை இருந்து வந்துள்ளது.

அதே நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் செங்கோட்டையனின் சகோதரர் காளியப்பன், அவரது மகன் செல்வம், செங்கோட்டையனுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு, கோபி நகராட்சித் தேர்தல் நடந்துள்ளதால், இரு கட்சிகளும், தலைவர் பதவியைக் கைப்பற்றுவதை தங்கள் கவுரவப் பிரச்சினையாக எடுத்து, தேர்தல்பணி ஆற்றியுள்ளன. கோபி தொகுதியில் தொடர் வெற்றி பெற்று வரும் செங்கோட்டையனின் செல்வாக்கை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் என்கின்றனர் தொகுதி வாக்காளர்கள்.

SCROLL FOR NEXT