திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்வச விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. (உள்படம்) இந்த நிகழ்வை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் தேவி, பூதேவியுடன்  பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். படங்கள்: க.பரத் 
தமிழகம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பார்த்தசாரதி பெருமாளுக்கான மாசி மாத பிரம்மோற்சவம் நேற்று காலை 8.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து சென்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 7.45 மணி அளவில் புன்னைமர வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை (22-ம் தேதி) அதிகாலை 5.30 மணி அளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். வரும் 23-ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நடைபெறுகிறது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணி நடந்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் என்ற சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT