படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

தாம்பரம் மாநகராட்சியில் வாக்குப்பதிவு சரிவு ஏன்? - ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம்: நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் நடந்த தாம்பரம் மாநகராட்சியில், முன்பு எப்போதும் இல்லாதஅளவில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், வாக்குப் பதிவு குறைவுக்கான காரணத்தை, தேர்தல்ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் முதல்முறையாக தேர்தலை சந்தித்ததில், வாக்குப்பதிவு 49.98 சதவீதம்தான் பதிவாகியுள்ளது. இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த மாநகராட்சி மாற்றத்தை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரே விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

விடுமுறை நாளான சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றதால், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாள் விடுமுறையைக் கழிக்க பலர் வெளியூர் சென்றிருக்கலாம். பூத் ஸ்லிப் சரிவர வழங்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலைப் போன்று போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்படவில்லை. கரோனா அச்சம் வேறு. இப்படிபல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன. இருப்பினும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற நகரப்பகுதிகளில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துஉள்ளது.

இதுகுறித்து கல்வி ஆர்வலர் புலவர் சுப்பு.இலட்சுமணன் கூறியதாவது: வாக்களிக்க மூன்றில் ஒரு பங்குமக்கள் விரும்பவில்லை. நமக்கு கரோனா பாதித்தால் அரசியல் கட்சியினரா காப்பாற்றப் போகிறார்கள் என்பது, படித்த மக்களின் எண்ணம். இந்தத் தேர்தலில் வேட்பாளர் அறிமுகம் சரிவர இல்லை என்பதாலும் வார்டு மாறி வேட்பாளர் போட்டியிட்டதாலும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் சராசரி வாக்குப்பதிவுகூட நடக்கவில்லை என்றார்.

முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: பொதுவாக உள்ளாட்சித்தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும். இந்த தேர்தலில் கட்சியினர் அதிக கவனம் செலுத்தவில்லை. அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்பவர்கள் வாக்களிப்பதில் மிகவும் சுணக்கம்காட்டுகிறார்கள். கடந்த 8 மாத ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு பணம் வழங்கப்படாததால் சில வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். முதல்முறை மாநகராட்சி என்பதால், அதிக வாக்குகள் கொண்ட வார்டுகளாக உள்ளன. முன்பு மேயர் வேட்பாளர் யார் என்று தெரியும். அவர்கள் தங்களை வெற்றிபெறச் செய்ய மன்ற உறுப்பினர்களுக்கு அதிக அளவில் செலவு செய்வார்கள். தற்போது அப்படி இல்லை என்றார்.

சமூக ஆர்வலர் சந்தானம் கூறியதாவது: எப்போதும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நகர்ப்புறங்களில் குறைவானதாகவே இருந்திருக்கிறது. யார் வந்தாலும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. முன்பெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் பெரிய திருவிழாபோல் விளம்பரங்கள் செய்து மக்களை வாக்களிப்பதற்கு கவர்ந்து இழுப்பார்கள்.

தற்போது விளம்பரங்களுக்கும் தடை உள்ளது. மீண்டும் மீண்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்தஒரு மாற்றத்தையும் காண முடியவில்லையே என்ற ஏமாற்றம். மேலும் பணம் கொடுப்பவர்களே ஜெயிக்க முடியும், நான் வாக்கு அளித்து என்ன பயன் என்ற மனநிலை. இந்தக் காரணங்களால்தான் வாக்குப்பதிவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT