ரத்த தான விழிப்புணர்வுக்காக நடை பயணம் மேற்கொண்டுள்ள டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் நெல்லைக்கு வந்தார்.
டெல்லியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கிரண் வர்மா. இவர், ரத்ததான விழிப்புணர்வுக்காக நடைபயணம் மேற்கொண்டு ள்ளார். நேற்று திருநெல்வேலிக்கு வந்த அவர் கூறியதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘சிம்ப்ளி பிளட்’ என்ற ரத்ததான அமைப்பை தொடங்கினேன். இது ரத்த தானம் செய்பவர்களையும், ரத்தம் தேவைப்படுபவர்களையும் கட்டணம் வசூலிக்காமல் இணைக்கும் தளமாகும். இந்த தளத்தின் உதவியால் இதுவரை ரத்த தானம் மூலம் 35,000 க்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் ரத்தத்துக்காக காத்திருந்து யாரும் இறக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 21 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கினேன். கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மங்களூரு, உடுப்பி, பெங்களூரு, மைசூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து 1,700 கிலோமீட்டருக்கும் மேல் நடந்து திருநெல்வேலிக்கு வந்துள்ளேன்.
இங்கிருந்து நாகர்கோவில் சென்று தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருக்கிறேன்.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் தன்னார்வ ரத்த தானம் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரத்தத்தைப் பெற தவறி விடுகிறார்கள், இதன் காரணமாக 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரத்தத்துக்காக காத்திருந்தனர். 5 மில்லியன் இளைஞர்கள் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தால், இந்தியாவில் ரத்தம் கிடைக்காமல் ஒரு மரணம் கூட நிகழாது. அந்த இலக்கை அடைய, நாம் மக்களையும் நமது சமூகத்தையும் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.