கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் ‘மக்கள் கவிஞர் அறக்கட்டளை’ சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்கள் கவிஞர்’ விருதை பெற்றுள்ளார் ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர், முனைவர் பு.சாரோன்.
‘பாட்டாளி படைப்பாளியான வரலாறு’ என்ற பெயரில் பு.சாரோன் உருவாக்கியுள்ள, கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த முழுநீள ஆவணப்படத்துக்காக இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து பு.சாரோன் கூறியதாவது:
இது என்னுடைய 8 ஆண்டு கால உழைப்பில் உருவான இரண்டரை மணி நேர ஆவணப்படம். பட்டுக் கோட்டையாரின் 4 புகைப்படங்களை வைத்துக்கொண்டுதான் ஆவணப் பட முயற்சியில் இறங்கினேன். பட்டுக்கோட்டையார் தனது வாழ்க்கை யில் அனுபவித்த போராட்டங்களை, வலிகளை எல்லாம் தன்னுடைய படைப்புகளில் பதிவுசெய்தவர். அதை ஆவணப்படுத்த தேடித் தேடி உழைத்ததால்தான் அவரது வரலாற்றை என்னால் முழுமையாக பதிவு செய்ய முடிந்தது. ஒரு மனிதனின் வாழ்வியல் மற்றும் சமூக வரலாற்றுப் பதிவாகவே இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும்.
இந்த தலைமுறையினர் இது போன்ற வரலாற்று சம்பவங்களை அறிந்து கொள்ள முனையும்போது அந்தக் காலகட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணரமுடியும். எனது முதல் ஆவணப்படமான இது, தமுஎகச விருது, இயக்குநர் மணிவண்ணன் விருது உள்ளிட்ட 5 விருதுகளை பெற்றுள்ளது.
நான்காவது நாற்காலி
ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆரை, மக்கள் பிரதிநிதியாக மாற்றியது கல்யாணசுந்தரத்தின் பாடல்களே.
‘காடு வெளெஞ்சென்ன மச்சான்.. நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’, ‘திருடாதே பாப்பா திருடாதே’, ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ போன்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் கள் எம்.ஜி.ஆரை மக்கள் நாயகனாக் கியது. இதற்கு சாட்சியாக ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1982-ம் ஆண்டில் சென்னை வானொலியில் பேசியபோது, “என் முதல்வர் நாற்காலியில் 3 கால்கள் எதுவென்று எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” என்று சொன்னார். 1959-ம் ஆண்டு தனது 29-வது வயதில் பட்டுக்கோட்டையார் காலமானார். மறைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில முதல்வர் ஒருவர் அவரை குறிப்பிடும்படி விட்டுச்சென்ற தன்னம்பிக்கையை, இந்த தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும் என்ற முயற்சியே இந்த ஆவணப்படம்.
ஓவிய உயிரோட்டம்
எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட சினிமா துறையினர், பட்டுக்கோட்டையாருடன் நாடகத் துறையில் உடனிருந்த கலைஞர்கள், அவரது சொந்த ஊரான பட்டுக் கோட்டைக்கு அருகிலுள்ள செங்கப் படுத்தான்காடு கிராமத்தில் மாடு மேய்த்த, மீன் பிடித்த மற்றும் கூலி வேலைசெய்த நாட்களில் அவரோடு பழகிய நண்பர்களின் பதிவுகளை எல்லாம் சேகரிக்க 8 ஆண்டுகளானது.
கவிஞரோடு 6 வயது முதல் நண்பராக இருந்த கே.என்.ராமச்சந்திரன் பெங்களூருவில் இருந்தார். புகழ்பெற்ற ஓவியரான இவர் ‘ராஜராஜ சோழன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பேனர் டிசைன் செய்தவர். அவரை பட்டுக்கோட்டையார்தான், ‘மோகன் ஆர்ட்ஸ்’ என்ற பெரிய ஓவிய கம்பெனியில் அன்றைய நாளில் வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார். இருவரும் நடந்த தெருக்கள், சாப்பிட்ட உணவகம், கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விஷயங்களை ராமசந்திரன் ஓவியங்களாக வரைந்து கொடுத்தார். அது ஆவணப்படத்தை மேலும் உயிரோட்டமாக்கியது.
இப்போது இந்த ‘மக்கள் கவிஞர்’ விருதுபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர் இரா.மணி பட்டுக்கோட்டையாருடன் பழகியவர். கவிஞரை பற்றிய நிகழ்ச்சி என்றால் அந்த இடத்தில் முதல் ஆளாக இருப்பார். இப்படி சுவாரஸ்யமான பல மனிதர்கள் இந்த ஆவணப்படத்தை எடுக்கும்போது கிடைத்தனர்.
எம்.ஆர்.ராதா, ஜீவா ஆகிய ஆளுமைகளோடு நேரடி தொடர்பில் இருந்த முக்கியமானவர்களை இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க முடியாது. அதனால்தான் இப்போது எம்.ஆர்.ராதா, ஜீவா இருவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என்றார் சாரோன்.