தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறப்போகிறது: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, இல்ல திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதல்வர், அன்பகம் கலையின் கட்சி பணிகள் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

அதன்பின்னர் முதல்வர் பேசியது: "நான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால், ‘நமக்கு நாமே’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணத்தை நடத்தினேன். அனைத்துத் தரப்பு மக்களையும் நான் சென்று சந்தித்தேன். விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளி பெருமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் - இவ்வாறு பலதரப்பட்ட மக்களை எல்லாம், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து, நேரடியாகச் சென்றேன்.

நாளை மறுநாள், நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரச்சாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை.

அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன்.

ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, “மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்” என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் அன்பகம் கலை அவர்களுடைய இல்ல மணவிழா நிகழ்ச்சியின் மூலமாக, என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்".இவ்வாறு அவர் உரையாற்றினார்.

SCROLL FOR NEXT