சேலம்: திமுகவினர் கள்ள வாக்கு பதிவு செய்ததன் மூலம் தேர்தலை நேரடியாக களத்தில் சந்திக்க திராணியற்ற கட்சியாக விளக்குகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"கோவையில் பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா விநியோகம் போன்ற அதிக அளவில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தை முறையிட்டு சிறப்பு அதிகாரிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இருப்பினும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மற்றும் சென்னையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறைகள் நடைபெற்றுள்ளது, குறிப்பாக சென்னை பல வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் தோல்வி பயம் காரணமாக திமுகவினர் கள்ள வாக்குகளை அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுகவினர் காவல்துறையினர் மிரட்டி கள்ள ஓட்டு பதிவு செய்ய முயற்சி செய்யும் வீடியோ பதிவு வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் திமுகவினரின் கள்ள ஓட்டு பதிவு செய்திருப்பது என்பது ஜனநாயக நாட்டின் மக்களுக்கு நடக்கும் அநீதி, அதனை தடுக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பது என்பது ஜனநாயக படுகொலை. இதன் மூலம் தேர்தலை நேரடியாக களத்தில் சந்திக்க திராணியற்ற கட்சியாக திமுக விளக்குகிறது."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.