தமிழகத்தில் பணப்பதுக்கல் தொடர்பாக திமுக, காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் அளிக்கப்படுவதாக, எதிர்க்கட்சிகள் தமிழகம் வந்த தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தன. தற்போது வேட்பு மனுத்தாக்கல் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக, கரூர், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தகவல்கள் அடிப் படையில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம், கணக்கில் வராத தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவை தொடர்பாக, வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த திமுக மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஆங்காங்கே பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதை தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
புலனாய்வு பிரிவினர்
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பணப்பதுக்கல் தொடர்பான சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு இடங்களில் தகவல்கள் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரகசிய தகவல்கள் அடிப் படையில் முதலில், தேர்தல் பறக் கும்படையினர் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றிவளைத்து, யாரும் வெளியேறி விடாதபடி பாதுகாக்கின்றனர். வருமானவரி புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை உறுதி செய்த பின் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவின் பேரில் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.