கே.பாலகிருஷ்ணன் 
தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கடிதம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல சபையில், பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த13-ம் தேதி அன்று தரிசனம் செய்ய சென்ற ஜெயசீலா என்ற பட்டியலினப் பெண்ணை அங்கிருந்த தீட்சிதர்கள், அவரை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், கேவலமாக பேசியும், கையால் தாக்கியும் கீழே தள்ளியுள்ளனர். இது தீண்டாமை வன்கொடுமையாகும்.

இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து 6 நாட்களுக்கு மேலாகியும் இதுவரைகுற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ‘சட்டத்துக்கு முன்அனைவரும் சமமானவர்கள்.’ ஆனால், மாவட்ட காவல்துறையினர் கண்டும், காணாமலும் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாக செயல்படும் நடவடிக்கையாக உள்ளது. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்பிக்கச் செய்யும் சட்டவிரோதமான நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பக்தர்களை தாக்குவது உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களை கோயிலை மையமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர். இவர்கள் மீது வரும் புகார்களை மாவட்ட காவல்துறையினர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுஇல்லை. இது குற்றவாளிகளுக்கு மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்தும் செயலாக அமைந்து விடுகிறது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்கள் அனைவரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இக்கடிதத்தின் நகல்கள் கடலூர் எஸ்பி மற்றும் சிதம்பரம் டிஎஸ்பி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT