நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணமும், பரிசுப் பொருட்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளன. எது நடந்தாலும் தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொள்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு ரொட்டிக்கார தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் சென்று நேற்று காலை வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 1,000, 2,000, 5,000 என பணம் கொடுத்துள்ளனர். யாருக்கு வாக்களித்தால் நல்லது செய்வார்கள்? யார் யோக்கியன் என்பதை அறிந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் எது நடந்தாலும் மவுனமாக இருந்தது மட்டுமல்ல; கண்களை மூடிக் கொண்டுள்ளது. பூத் குழப்பத்தால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்தல் கமிஷன் மீது அதிருப்தி அடைந்துள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், “உள்ளாட்சி அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் முதன்மை அமைப்பு. ராஜீவ்காந்தி கொண்டுவந்த 11-வது அட்டவணையான பஞ்சாயத்து ராஜ் மற்றும் 12-வதுஅட்டவணையான நகர் பாலிகாவை சுயாட்சியாக, சுதந்திரமாகசெயல்பட மாநில அரசு அனுமதிக்கவில்லை.
நிதி ஆதாரங்களை மாநில அரசு கொடுப்பதில்லை. பாமக தன் தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சிகளுக்கு முழுமையான அதிகாரத்தையும், நிதி ஆதாரத்தையும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது” என்றும் தெரிவித்தார்.