நாகர்கோவில் மாநகராட்சிக்கான முதல் மேயரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால், திமுக, பாஜக, அதிமுகவினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், வாக்குக்கு ரூ.2,000 வரை பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பல இடங்களில் பணம் விநியோகம் செய்தவர்களை, மாற்றுகட்சியினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பணம் விநியோகத்தை தடுக்க முடியாமல் பறக்கும் படையினர் திணறினர்.
நேற்று அதிகாலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு, 11-வது வார்டு, 38-வது வார்டில் வீடுவீடாக சிலர் பணம் விநியோகம் செய்தனர். அதிகாலையில் ஆட்கள் விழித்திருந்தால் அந்த வீட்டுக்கு நேரடியாக பணம் வழங்கினர். கதவு திறக்காமல் இருந்தால் அந்த வீட்டுக்குள் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய அட்டையுடன் 1,000 ரூபாயை ரப்பர் பேண்டில் சுற்றி, வீட்டுக்குள் வீசிச் சென்றனர். காலையில் எழுந்தவர்கள், பணம் கிடப்பதைப் பார்த்து பரபரப்பு அடைந்தனர்.
வார்டுகளில் 3,000 வாக்குகளே உள்ளதால், 50 சதவீத வாக்குகளைப் பெறுவோர் வெற்றிபெறும் நிலை உள்ளதால், பணம் விநியோகம் நடைபெற்றது. பறக்கும் படையினரால், பணம் விநியோகம் செய்த கும்பலைப் பிடிக்க முடியவில்லை.