தேர்தல் நியாயமாக நடக்க மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள கோயம்புத்தூர் மலையாளிகள் சமாஜம் பள்ளியில் வானதி சீனிவாசன் வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த சில நாட்களாக கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றை அளித்துள்ளனர். பொதுமக்கள் அதையும் மீறி நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சில இடங்களில் வாக்காளர்கள், பிரச்சாரத்துக்கு சென்றவர்கள் மிரட்டப்பட்டனர்.
இத்தனையும் தாண்டி கோவையின் மானப் பிரச்சினையாக மாறியிருக்கும் தேர்தலில் மக்கள் மிகச் சரியான முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் தாண்டி ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
கோவை மாநகராட்சியின் வார்டுகள் புதியதாக சேர்க்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் உள்ளன. தேர்தல் ஆணையம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. என்னுடைய வாக்குச்சாவடி மையம் இன்னொரு பள்ளியில் காண்பிக்கிறது. தேடிய பின்பு இந்த வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து வாக்களிக்க வேண்டியதாயிற்று. மக்களில் எத்தனைபேர் பொறுமையாக தேடிச் சென்று தங்களது வாக்கை செலுத்துவார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் அரையும்குறையுமாக சரியான ஏற்பாடு இல்லாமல் இந்த தேர்தலை நடத்துகிறது. வாக்காளர் பட்டியலிலும், நியாயமான தேர்தல் நடத்துவதிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை” என்றார்.
ஆட்சியர் கருத்து
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, ‘‘வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் இருந்து சிறிய அளவிலான புகார்கள் வந்தன. பறக்கும்படையினர், காவல்துறையினரை அங்கு அனுப்பி விசாரிக்கப்பட்டது. பெரிய அளவிலான புகார்கள் எதுவும் வரவில்லை’’ என்றார்.