தமிழகம்

இலங்கை தமிழர்கள் மீதான தமிழக அரசின் அணுகுமுறை போற்றுதலுக்கு உரியது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உலக தமிழர் பேரவை பாராட்டு

செய்திப்பிரிவு

இலங்கை தமிழர்கள் மீதான தமிழக அரசின் அணுகுமுறை போற்றுதலுக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராகி இன்னும் ஒரு வருடம் கூட கழியாத நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆளுமையை தமிழகத்திலும், உலக தமிழர் மத்தியிலும் வெளிக்காட்டியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களினது, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினது கண்ணோட்டத்திலும் தற்போதைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அணுகுமுறையானது போற்றுதற்குரியது.

இலங்கை தமிழரின் போராட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ஆதரவான நிலைப்பாடானது அவரது தந்தை கருணாநிதி உட்பட தமிழ்நாட்டின் திராவிட தலைவர்கள் எடுத்த ஆதரவான நிலைப்பாட்டின் நீட்சியாக உள்ளது. இலங்கையின் தமிழர்கள் மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர். போர் முடிவடைந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் பொருளாதார வாய்ப்புகள் மோசமாக உள்ளன. போர் தொடர்பான பொறுப்புக்கூறலின் முன்னேற்றமும் மிக சிறிய அளவிலேயே உள்ளது.

வரையப்பட்டு வருவதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்பு சட்டம் தமிழர்களின் நிலையினை இன்னமும் பலவீனப்படுத்தலாம். குறிப்பாக, நேரடிஇந்திய தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையினை நீக்கவோ அல்லது பலவீனமடைய செய்யவோ கூடுமென்றஅச்சம் காணப்படுகிறது இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்களின் வரலாற்று அடிப்படையினாலான வாழ்விட பகுதிகளில் (வடக்கு மற்றும் கிழக்கு) ஒரு சுய ஆட்சியினை விரும்புகின்றனர். இந்தியா இலங்கையின் மீது கணிசமான செல்வாக்கை கொண்டுள்ளதோடு சமத்துவம், நீதி, சமாதானம், கண்ணியம் மற்றும் அர்த்தமுள்ள அரசியல் அதிகார பகிர்வினை நிவர்த்தி செய்யுமாறு இலங்கைக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தொடர்பான இந்திய கொள்கைகளை அமைப்பதில் தமிழ்நாடு எப்போதுமே முக்கியமானதொரு பங்கு வகித்து வந்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்த பிரச்சனையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்ட கால அமைதி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு முக்கியமானதாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT