நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாம்பரம் மாநகராட்சி கன்னடபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களித்துள்ளதாக நான் நம்புகிறேன். தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியே மகத்தான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்தில் அனைத்து தரப்பினரிடமும் நல்லாதரவு, நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறக்கூடிய அளவுக்கு ஒரு நல்லாட்சி நிர்வாகத்தை வழங்கி வருகிறார். தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர், ஆட்சி நிர்வாகத்தில் திறன்வாய்ந்த முதல்வர் என்ற பாராட்டையும் அவர் எட்டு மாதத்தில் பெற்றிருக்கிறார்.
எங்களது கூட்டணி பலமும், தமிழக முதல்வரின் நன்மதிப்பும் எங்களுக்கு சாதகமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மறைமலை நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் மையங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் காஞ்சி ஆட்சியர் மா. ஆர்த்தி, திருவள்ளூர் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரும் வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.