பூத் கமிட்டி செலவுக்குக் கூட கட்சியிலிருந்து பணம் கொடுக்காததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால், வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென திமுகவினர் ஆரம்பத்திலிருந்தே தீவிர முயற்சி மேற்கொண்டனர். திமுக வேட்பாளர்களின் செலவுக்கு அந்தந்த ஊரிலுள்ள அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் உதவி செய்தனர்.
திருச்சி மாநகராட்சியிலும் இதேநிலை காணப்பட்டது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, உளவுப்பிரிவு ஆகியவை அவ்வப்போது அளித்த சர்வே முடிவுகளின்படி மாநகராட்சி பகுதியில் பலவீனமாக உள்ள சில வார்டுகளைக் கண்டறிந்து, அவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு கூடுதலாக நிதி கொடுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டனர். இதனால் திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து நேற்று வாக்குப்பதிவு முடியும்வரை உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர்கள் அதிருப்தி
ஆனால் அதிமுக தரப்பிலோ நிலைமை தலைகீழாக காணப்பட்டது. அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 64 பேரில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வசதி படைத்தவர்களைத் தவிர, மற்ற வேட்பாளர்கள் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் செலவுக்குப் பணமின்றி அவதிப்பட்டனர். வாக்காளர்களிடம் விநியோகிப்பதற்கான துண்டறிக்கைகள், பிரச்சார வாகனங்களுக்கான வாடகை, உடன் வருவோருக்கான போக்குவரத்துச் செலவு, பூத் கமிட்டி செலவு என ஒவ்வொன்றுக்கும் சிரமப்பட்டனர். கடைசி நாள்வரை, கட்சியிலிருந்து பணம் வந்து சேராததால் வாக்குப்பதிவு நாளான நேற்று அதிமுக வேட்பாளர்களில் சிலர் சோர்வுடன் காணப்பட்டனர்.
கடைசி வரை ஏமாற்றம்
இதுகுறித்து அதிமுக வேட்பாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அதிமுகவில் இதற்கு முன் எப்போதும் இப்படி நடந்ததில்லை. இதற்கு முன் 10 ஆண்டுகளாக அதிமுக ஆளும்கட்சியாக இருந்தும், தற்போது தேர்தலில் செலவுக்கு பணமின்றி கஷ்டப்பட்ட வேட்பாளர்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் உதவ முன்வரவில்லை.
இங்கு போட்டியிட்டவர்களில் பணம் படைத்த அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே, நன்றாக செலவு செய்தனர். கட்சியை நம்பி களமிறங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், தங்களிடம் இருந்தவற்றையெல்லாம் இழந்துவிட்டு, வெற்றி பெறுவோமா என்ற ஐயத்துடன் குழப்பத்தில் நிற்கின்றனர்.
கட்சிக்கு முழுமையான வெற்றியைத் தேடி தர வேண்டும் என நினைக்க வேண்டிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கு வேண்டிய வேட்பாளர்களை மட்டுமே ‘கவனித்து' கொண்டனர். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 2 முன்னாள் அமைச்சர்கள் கூட எங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளவில்லை.
பிரச்சாரத்துக்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஏதாவது செய்வார்கள் என நம்பினோம். ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நேரத்திலாவது கட்சியிலிருந்து கொஞ்சம் நிதி கொடுத்து உதவி இருந்தால், நிச்சயம் நாங்களும் உறுதியாக வெற்றி பெறும் நிலையை ஏற்படுத்தி இருப்போம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
அதேபோல, வாக்குப்பதிவு நாளான நேற்று திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நாளிதழ்களில் போட்டிபோட்டு முழுப் பக்கத்துக்கு விளம்பரங்கள் கொடுத்து, தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரியிருந்தன. ஆனால் அதிமுகவிலிருந்து அப்படிப்பட்ட விளம்பரம் கூட கொடுக்கப்படவில்லை. தலைமையில் உள்ளவர்களிடம் பணமில்லையா அல்லது மனமில்லையா எனத் தெரியவில்லை. இப்படியே போனால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிதான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றனர்.
இபிஎஸ் சொல்லியும் பலனில்லை
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடத்திலிருந்து பணம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பிரச்சாரத்துக்காக திருச்சி வந்திருந்தபோது முன்னாள் அமைச்சர் ஒருவரை அழைத்து, மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்து அவர் மூலமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைக் கொடுக்குமாறு கூறியிருந்தார்.
ஆனால், என்ன காரணத்தினாலோ, அவர் சொன்னதை செய்யாமல் விட்டுவிட்டனர். ஆனாலும், அதிமுக பல வார்டுகளில் வெற்றி பெறும்.
அனைத்து வேட்பாளர்களுக்கும் கட்சியிலிருந்து பணம் கொடுத்தி ருந்தால் இன்னும் கூடுதலான வார்டுகளில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.