தூத்துக்குடியில் 40 ஆண்டுகளாக சாலையோரம் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே 25 நரிக்குறவர் குடும்பத்தினர் சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளாக சாலையோர கூடாரங்களில் வசித்து வரும் இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லாமல் இருந்து வந்தது.
இதையடுத்து அவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், தகுதி யான ஆண்கள், பெண்கள் என 52 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவர்களுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடியில் நரிக்குறவர் இன மக்கள் முதல் முறையாக தங்களது வாக்குரிமையை செலுத்தினர். தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டில் அவர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடிக்கு அவர்கள் குடும்பத்தோடு காலையிலேயே வந்து வரிசையில் நின்று வாக்களத்தனர்.
இதுகுறித்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாரி என்ற பெண் கூறும்போது, ‘‘40 ஆண்டுகளாக இங்கு நாங்கள் குடியிருந்து வருகிறோம். இப்போது தான் முதல் முறையாக வாக்களித்துள்ளோம். இது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
மேலும், ஜனநாயக கடைமையை செய்திருப்பதன் மூலம் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம். எங்களுக்கு அரசு நிரந்தரமாக வீடு கட்டிக் கொடுத்தால் நிரந்தர முகவரியோடு வாழ்வோம். எங்கள் குழந்தைகளது எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்றார் அவர்.