கரூர்: கரூரில் தனது பெயரில் போலி வாக்குப் பதிவான ஆத்திரத்தில் பிற வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் 2 மணி நேரம் ரகளையில் ஈடுபட்ட வாக்காளரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
கரூர் மாநகராட்சி 12-வது வார்டு வாக்குச்சாவடி மையமான வடக்கு பசுபதிபாளையம் புனித மரியன்னை உதவிபெறும் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு பாலசுப்பிரமணியம் என்பவர் மாலை 4.30 மணிக்கு வாக்களிக்க வந்தப்போது அவரது வாக்கை வேறு யாரோ செலுத்தியிருந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியம் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் படிவம் மூலம் வாக்களிக்கலாம் என தெரிவித்த நிலையில் பாலசுப்பிரமணியம் அதனை மறுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்களிப்பேன். நான் வாக்களித்தப் பிறகே அடுத்தவர் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு வாக்களிக்க வரிசையில் நின்றவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் 4.50 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தேர்தல் அலுவலர், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளார் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் சுமார் 2 மணி நேரமாக 30-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருந்தனர். அதன்பின் போலீஸார் அவரை வெளியேற்றியதால் 2 மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதனிடையே, இரு வாக்காளர்கள் வாக்களிக்க வந்துவிட்டு தங்கள் வாக்குகள் செலுத்தப்பட்டு விட்டதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.