சென்னை: "மேற்கு மண்டலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த முறை அங்கு நிச்சயமாக வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோரும் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: " உள்ளாட்சித் தேர்தல் இன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தார்களோ, அதைவிட ஒரு பெரிய வெற்றியை மக்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முதல்வர், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு மக்கள் சரியான தீர்வை மக்கள் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
மேற்கு மண்டலத்தில் மக்கள் வரவேற்கின்றனர். அவர்களின் வெளிப்பாடு நன்றாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்தது. அங்கு இந்தமுறை நிச்சயமாக வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கோவையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருள்கள் விநியோகம் குறித்து ஆதாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுதான் அது, அதிமுகவினர் தோல்வி பயத்தில் அவ்வாறு கூறுகின்றனர் என்பதுதான் என்னுடைய கருத்து" என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.