முற்றுகையில் ஈடுபட்ட வேட்பாளர்கள் |  படங்கள்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கோவை: திமுகவினர் பரிசுப் பொருள் விநியோகித்ததாக தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போராட்டம்

டி.ஜி.ரகுபதி

கோவை: திமுகவினர் பரிசுப் பொருள் விநியோகித்ததாக தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 63-வது வார்டு உட்பட்ட ராமநாதபுரம் 80 அடி சாலையில் ஒரு வாக்குச்சாவடி உள்ளது . இதற்கு அருகே சிறிது தூரம் தள்ளி திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் இன்று காலை வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் மற்றும் ஹாட் பாக்ஸ் விநியோகிப்பதாக புகார் எழுந்தது.

இதையறிந்த அந்த வார்டுக்குட்பட்ட அதிமுக வேட்பாளர், பாஜக வேட்பாளர், மக்கள் நீதி மையம் வேட்பாளர், நாம் தமிழர் வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இணைந்து அந்த திருமண மண்டபத்தை பூட்டினர். உள்ளே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர் இருந்தனர். பின்னர், இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர் .இந்த விவகாரம் தொடர்பாக அங்கு இருந்த மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலரிடம் புகார் அளித்தனர் ஆனால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு முன்பு கோஷமிட்டனர். பின்னர், உதவி ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கூறும்போது, "இந்த வார்டுக்குட்பட்ட வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம், பொருள் இன்று காலை முதலே விநியோகித்தனர். நாங்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தோம். போலீஸார் அவர்களை அனுப்பி வைத்துவிட்டனர். தேர்தலை ரத்து செய்ய வேண்டும். முறையாக தேர்தல் நடக்க நடத்தப்படவில்லை" என்றனர்.

SCROLL FOR NEXT