கடலூர்: கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி,நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம்,வடலுார், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி,கெங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு,லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம்,கிள்ளை என 14 பேரூராட்சிகளில் உள்ள 437 கவுன்சிலர் பதவிக்களுக்கு 1994 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 447 கவுன்சிலர் பதவிகள் இதில் 10 போட்டியின்றி தேர்வு) மாவட்டத்தில் 715 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் 5,87,855 பேர் உள்ளனர்.5,135 அலுவலர்கள், பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாங்களிக்க தொடங்கினார். வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
எஸ்பி எஸ்.சக்திகணேசன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கடலூர், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம் மான சந்து நகராட்சி பள்ளியில் வாக்குசாவடியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில் ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடிகளிலும் நல்லமுறையில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது” என்றார்.
கடலூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி மொத்தமாக 25.44 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது. வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வேட்பாளர்கள் அந்தந்த பகுதி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.