மறைமலை நகர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய மறைமலை நகர் நகராட்சியை இதுவரை திமுக கைப்பற்றியது இல்லை. முதல்முறையாக அதைக் கைப்பற்றும் எண்ணத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுகவை எதிர்த்து, மீண்டும் கைப்பற்ற அதிமுக களமிறங்கியுள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்ததால் நெரிசலைக் குறைக்க, 1 லட்சம் குடும்பங்களை கொண்டு துணை நகரம் உருவாக்க திட்டமிட்டு, தற்போதுள்ள மறைமலை நகர் பகுதியை கடந்த 1976-ம் ஆண்டு அரசு தேர்வு செய்தது. அப்போது இந்தப் பகுதி முற்றிலும் காடாக மட்டுமே இருந்தது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், சுமார் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அந்தப் பகுதிக்கு ‘மறைமலை நகர்’ என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
பிறகு அருகில் இருந்த பேரமனூர், திருக்கச்சூர், செங்குன்றம், கழிவந்தபட்டு, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, நின்னக்கரை போன்ற 7 கிராம ஊராட்சிகளை இணைத்து, முழுமையான மறைமலை நகர் நகரியம் என 1985-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிறகு, 1994-ம் ஆண்டு பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 2004-ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அப்போது திமுக - தமாகா கூட்டணியில் மாரி என்பவர் தலைவரானார். 2001-ல் அதிமுக கோபி கண்ணன், 2006-ல்திமுக கூட்டணியில் பாமகவின் சசிகலா ஆறுமுகம், 2016-ல் மீண்டும் அதிமுக கோபி கண்ணன் தலைவராக பதவி வகித்தனர். தற்போது 21 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக - 18 , மதிமுக -1, விசிக-1, கம்யூனிஸ்ட் -1 போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 21 இடங்களில் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் தலைவராக வாய்ப்புள்ள ஜெ.சண்முகம் 12-வது வார்டில் போட்டியிடுகிறார். இதேபோல் 20-வது வார்டில் து.மூர்த்தி, மோகனாம்பாள் சீனிவாசன் 8-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். இவர்களில் சண்முகத்துக்கே அதிக வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் முன்னாள் தலைவர் கோபி கண்ணன் 10-வது வார்டிலும், நகரச் செயலாளர் ச.ரவிக்குமார் 14-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
மறைமலை நகரை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கினாலும் இதுவரை திமுக அங்கு தலைவர் பதவியை கைப்பற்றவில்லை. தற்போது, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக தலைவர் பதவியை கைப்பற்ற திமுக அசுர வேகத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றது.
இங்கு, திமுகவின் சண்முகமும் அவரது ஆதரவாளர்களும் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ரகசியமாக எதிரணிக்கு வாக்கு சேகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, மீண்டும் அதிமுகவே தலைவர் பதவியை கைப்பற்றும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.