தமிழகம்

சென்னை குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும்: நாளை முதல் 23-ம் தேதி வரை பார்க்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற 3 அலங்கார ஊர்திகள் நாளைமுதல் 23-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேற்றுவெளியிட்ட அறிக்கை:

சென்னையில் கடந்த ஜன.26-ம் தேதிநடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழகசுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் போற்றி, பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன.

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அன்றைய தினம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மூன்று அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தமிழகத்தைச் சுற்றி வந்த இந்த அலங்கார ஊர்திகள் பிப்.18-ம் தேதி சென்னை வந்தன. இந்த அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வையிடுவதற்காக நாளை முதல் 23-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பார்வையிட வேண்டும். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.விஜயா ராணி கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT