தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் பிரதான கட்சியினர் பணப் பட்டுவாடா: விரக்தியில் சுயேச்சை வேட்பாளர்கள்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் ஓய்ந்ததும் பல்வேறு இடங்களில் பிரதானக் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், தங்களின் வெற்றிவாய்ப்புப் பாதிக்கப்படும் என்று சுயேச்சைகள் விரக்தி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறி விக்கப்பட்டு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் அதிமுக 48, திமுக 32, பாஜக 26, காங்கிரஸ் 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, தேமுதிக 5, மக்கள் நீதி மய்யம் 21, நாம் தமிழர் கட்சி 23, பாமக 24 வார்டுகளிலும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 69 பேர் உட்பட 268 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜ பாளையம், சாத்தூர், வில்லிபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வார்டுகளில் அதிமுக 169, பாஜக 92, இந்திய கம்யூனிஸ்ட் 1, தேமுதிக 21, திமுக 140, காங்கிரஸ் 18, மக்கள் நீதி மய்யம் 23, நாம் தமிழர் கட்சி 40, பாமக 4 வார்டுகளிலும் என சுயேச்சை வேட்பாளர்கள் 145 பேர் உட்பட மொத்தம் 741 பேர் களத்தில் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது. ஆனால், பிரதானக் கட்சிகள் வாக்கு வேட்டைக்காகப் பணப் பட்டுவாடாவில் இறங்கியுள்ளதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன.

பல வார்டுகளில் பிரதானக் கட்சிகள் சார்பில் வாக்குக்கு ரூ.500 வரை கொடுக்கப்பட்டதாகவும், எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் எனப் போட்டியில் இறங்கியுள்ள விஐபி வார்டுகளில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை ஒரு வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விருதுநகர் 2-வது வார்டில் நேற்று முன்தினம் இரவு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி, அதிமுக வேட்பாளர் கருப்பசாமி தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்து அவர்களை சிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சுயேச்சை வேட்பாளர்கள் கூறியதாவது: இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ரூ.200, ரூ.300 தான் பெரிய கட்சிகள் பணம் கொடுத்தன.

ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இது வரை இல்லாத அளவுக்கு வாக்குக்கு ஆயிரத்துக்கு மேல் கொடுக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் மாறும் சூழ்நிலை ஏற் பட்டுள்ளது.

இதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதால் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம், என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT