கோப்புப் படம் 
தமிழகம்

முல்லைப் பெரியாறு | கேரள அரசின் புதிய அணைத் திட்டத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: "புதிய அணை கட்டும் திட்டத்தை கேரள அரசு திணிக்க முடியாது, தமிழகத்திற்கான உரிமையை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது" முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் அம்மாநில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உரையில், ”முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும், இது பொது மக்களின் பாதுகாப்புக்கு முக்கியமானது. மேலும், புதிய அணையைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

கேரள மாநில ஆளுநரின் உரைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் உரை குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "கேரள சட்டமன்றத்தில் இன்று கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது 07.05.2014 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லைப் பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும். தமிழகத்திற்கான உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT