மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். சின்னத்திரை இயக்குநர். இவர் தனது ‘முல்லைவனம் 999’ கதையை யு-டியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தார். யு-டியூப்பில் இருந்து தனது கதையைத் திருடி, ‘லிங்கா’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்ததாகவும், இதனால் ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தனது முழு கதையையும் ரவிரத்தினம் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுபடி ‘லிங்கா’ திரைப்படத்தின் முழுக் கதையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கதை திருட்டு நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய இரு கதைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் இரு கதைகளையும் ஆய்வு செய்ய 9 பேருக்கும் குறையாத நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடக் கோரி முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் 18.3.2016-ம் தேதி தள்ளுபடி செய்தது.
சீராய்வு மனு தாக்கல்
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ரவிரத்தினம் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், கதை திருட்டு நடைபெற்றுள்ளதா? இல்லையா என்பதை நிபுணர்கள் குழு மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். நீதிபதியால் கதை திருட்டு தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியாது. திரைப்பட கதையில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே கதைகளை ஒப்பீடு செய்ய முடியும். இதனால் நிபுணர் குழு அமைக்காவிட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே நிபுணர் குழு அமைக்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, கதை திருட்டு நடைபெற்றுள்ளதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க நிபுணர் குழு அவசியம் இல்லை. இரு படத்தின் கதையை ஒப்பீடு செய்து திருட்டு நடைபெற்றுள்ளதா, இல்லையா என்பதை நீதிபதியால் கண்டறிய முடியும். இதனால் நிபுணர் குழு அமைக்க மறுத்து கீழமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.