திருவள்ளூரை சேர்ந்த திமுக தொண்டர் தமிழகம் முழுவதும் சைக்கிள் மூலம் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் எஸ். சஞ்சீவி (45). தீவிர திமுக தொண்டரான இவர், தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதற்காக தனது சைக்கிளில் கூட்டணி கட்சிகளின் கொடிகளை கட்டி தொகுதி வாரியாக வலம் வருகிறார். பொதுமக்களை சந்தித்து முந்தைய திமுக அரசின் சாதனைகள், தற்போதைய அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 10-ம் தேதி தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிய சஞ்சீவி சுமார் 1,000 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு நேற்று நெல்லை வந்தார்.
சஞ்சீவி கூறியதாவது: நான் திமுகவில் சாதாரண தொண்டன்தான். ஊரில் சிறிய ஹோட்டல் நடத்தி வருகிறேன். திமுக கூட்டணியை ஆதரித்து மாநிலம் முழுவதும், நான் சைக்கிள் பிரச்சாரம் செய்யும் 5-வது தேர்தல் இது.
புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்செந்தூர் வழியாக தற்போது திருநெல்வேலி வந்துள்ளேன். அடுத்ததாக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். வரும் மே 14-ம் தேதி சென்னையில் எனது பயணத்தை முடிப்பேன். இதுவரை 1,000 கி.மீ. பயணம் செய்துள்ளேன். இன்னும் 1,500 கி.மீ. பயணிக்க திட்டமிட்டுள்ளேன்.
செலவுக்கான பணத்தை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.