கும்பகோணம்: மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மாசி மாத மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டு மாசிமக விழாவை முன்னிட்டு பிப்.8-ம் தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாட்கள் உற்சவம் நடைபெற்றது. இதுதவிர, பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்த கலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதின உற்சவம் நடைபெற்றது.
மாசிமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுதல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை மேற்கண்ட 12 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் 4 கரைகளிலும் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து, அந்தந்தக் கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அஸ்திரதேவர்கள் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளியதை அடுத்து, அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தேரோட்டம்
கும்பகோணத்தில் உள்ள வைணவத் தலங்களான சக்கரபாணி சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள், ராஜகோபாலசுவாமி கோயில்களில் மாசி மகத்தையொட்டி,10 நாட்கள் நடைபெறும் விழா பிப்.9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சுவாமி,தாயார் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
இதேபோல, கும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை குளத்தில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆரத்தி பெருவிழா
அகில பாரதீய சன்னியாசி சங்கம்மற்றும் தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை சார்பில், நீர்நிலைகளை பாதுகாக்கவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மகாமகக் குளத்தில் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. இதில், ஏராளமான துறவிகள் கலந்துகொண்டனர்.