புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஒருவார காலம் நடைபெற்றது. இதில் ரூ.9,900 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கு வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்தப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பேரவை செயலாளர் முனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, ‘‘நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 23 அல்லது 28 ஆகிய ஏதேனும் ஒருநாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி முடிவு செய்து, பிறகுஆளுநரின் ஒப்புதலுக்கு கோப்புஅனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல்வர், ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு தேதி முடிவு செய்யப்படும். அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவிப்பார்கள்’’ என்று தெரிவித்தார். புதுச்சேரியில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்றவிதிகளின்படி, மார்ச் 2-ம் தேதிக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதால் இம்மாத இறுதிக்குள் கூட்டப்பட வேண்டியுள்ளது. அதனால், நிகழாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.