தமிழகம்

போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் 2 நீதிபதி பணியிடங்கள் காலி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத் துள்ளது.

கஞ்சா வழக்கில் கைதான தனுஷ், சிவகாளை ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க மதுரையில் 3 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் ஒன்றில் மட்டுமே நீதிபதி உள்ளார். மற்ற இரு நீதிமன்றங்களில் ஒன்றரை ஆண்டுகளாக நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் முழுமையாக விசாரிக்க முடிவதில்லை.

இந்த வழக்குகளில் கைதான சுமார் 1200 பேர் பல்வேறு சிறைகளில் உள்ளனர். வழக்குகள் தேக்கம் அடைந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டிய பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மதுரை போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் 2 நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது வரும் என்று கூறி விசாரணையை மார்ச் 1-க்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT