தமிழகம்

விஷ ஊசி போட்டு 3 பேரை கொன்ற விவகாரம்: கொலை செய்வது எப்படி என்று இணையதளம் மூலம் தெரிந்துகொண்டேன் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் வசிப்பவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 4-ம் தேதி ஸ்டீபன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி(32), முருகானந்தம்(27), சதீஷ்குமார்(26) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பாலாஜி, முருகானந்தம் ஆகிய இருவரும் ஏற்கெனவே ஸ்டீபனிடம் வேலை செய்து வந்துள்ளனர். இதனால் ஸ்டீபனிடம் பணப் புழக்கம் அதிகம் இருப்பதை தெரிந்துகொண்டு அவற்றை திருடியுள்ளனர். திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, ஸ்டீபன் கூறியதன்பேரில், 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியதைக் கேட்ட போலீஸார் அதிர்ந்து விட்டனர். அதைத் தொடந்து ஸ்டீபனை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது:

‘‘பெண்களுடனான எனது தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த எனது மனைவியின் சகோதரர் ஜான் பிலோமினன், தான் தொடர்பு வைத்திருந்த பெண்களின் கணவர்களான உத்திரமேருரைச் சேர்ந்த ஸ்ரீதர், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஹென்றி ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தேன். இதற்காக பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார் ஆகியோரின் உதவியை நாடினேன். பின்னர் போலீஸாரிடம் பிடிபடாமல் கொலை செய்வது எப்படி என்று இணையதளத்தில் தேடினேன். அப்போதுதான் விஷ ஊசி போட்டு கொலை செய்யும் தகவல்கள் கிடைத்தன.

ஊசி மூலம் விஷத்தை செலுத்ததுவதற்கு நூதனமான முறையை பயன்படுத்தினேன். குடையின் முன் பகுதியில் கம்பி போன்று நீண்டு கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் விஷம் ஏற்றப்பட்ட சிரஞ்சை வைத்து கட்டினேன். அந்த குடையை மோட்டார் சைக்கிளில் பாலாஜியும், முருகானந்தமும் கொண்டு செல்வார்கள். தான் கொலை செய்ய வேண்டியவர்கள் சாலையில் வரும்போது அவர்கள் மீது அந்த குடையை வைத்து குத்தி விட்டு சென்றுவிடுவார்கள். இதில் விஷ மருந்து அவர்களின் உடலுக்குள் இறங்கிவிடும். குத்து பட்டவர் 5 நிமிடங்களுக்கு உள்ளேயே கீழே விழுந்து இறந்துவிடுவார். அது இயற்கை மரணம் போலவே அனைவருக்கும் தெரிந்தது. இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

ஊசியில் பொட்டாசியம் சயனைடு என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தினேன். இதை மும்பையில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கினேன். இதில் 1 மில்லி அளவு உடலில் செலுத்தினாலே இறந்துவிடுவார்கள். ஆனால் ஊசி மூலம் 5 மில்லி அளவு விஷத்தை ஏற்றி 3 பேரை கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT