திண்டுக்கல் மாநகராட்சி 2-வது வார்டில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி.  
தமிழகம்

திண்டுக்கல்: முக்கியக் கட்சிகளுக்கு ’டஃப்’ கொடுத்து களம் காணும் சுயேச்சை வேட்பாளர்கள்!  

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகளுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் களம் இறங்கி மும்முரமாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாட்டு பாடி வாக்கு சேகரித்தனர். திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா, நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பிரதான கட்சிகளுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது வார்டில் போட்டியிடும் சந்தோஷ்முத்து என்பவர் தொலைக்காட்சி பிரபலங்களான நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆகியோரை அழைத்து வந்து பாட்டுபாட வைத்து, வாக்கு சேகரித்தார். செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் தொலைக்காட்சி பார்க்கும் பெண்களுக்கு அறிமுகமான முகங்கள் என்பதால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்றனர்.

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுபவர் ஆஷாரவீந்திரன். சமூகசெயற்பாட்டாளரான இவர் கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்றார். இந்தமுறையும் போட்டியிடும் இவர், கொடைக்கானல் 21-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வாக்கு சேகரித்தார்.

கொடைக்கானல் நகராட்சி 21-வது வார்டில் மரக்கன்றுகள் வழங்கி பிரச்சாரம் செய்த சுயேச்சை வேட்பாளர் ஆஷாரவீந்திரன்

திண்டுக்கல் மாநகராட்சி 4-வது வார்டில் போட்டியிடும் அய்யாத்துரை என்ற சுயேச்சை வேட்பாளர் ‘பணமா, பாசமா’ என மக்களிடம் கேள்விகேட்டு போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்துள்ளார். கொடைக்கானல், பழநி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் பிரதான கட்சிகளுக்கு இணையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT