சென்னை: "வேகமாக வளர்ந்து வந்த கோவை நகரின் வளர்ச்சி, 1998 குண்டுவெடிப்புக்கு பிறகு சற்று பின்நோக்கி சென்றுவிட்டது. கோவை அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில், மத்திய அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொன்னையராஜபுரம், ராஜவீதி, தேர்நிலைதிடல் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியது: "தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. கோவை மாநகராட்சிக்கு வரும் நிதியில் 85 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி, பாதாள சாக்கடை திட்டம், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசுதான் அளிக்கிறது. ஆனால், கீழ்மட்ட அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு அந்த நிதி முழுமையாக சென்றடைவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2014-ல் அறிவிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது நிறைய இடங்களில் திட்டத்தை முடிக்காமல் உள்ளன.
இதேபோலத்தான் பாதாள சாக்கடை திட்டமும் உள்ளது. 30 முதல் 40 சதவீதம் கமிஷன் அளித்து ஒருவேளையை செய்யும்போது எப்படி மக்களுக்கு அது நல்ல திட்டமாக அமையும்?. அதுதான் பாஜகவின் கோபம். எனவேதான், பாஜக வேட்பாளர்கள் நேரடியாக களத்தில் உள்ளனர். கோவை நகரம் அடுத்தகட்டதுக்கு செல்ல வேண்டும். வேகமாக வளர்ந்து வந்த கோவை நகரின் வளர்ச்சி, 1998 குண்டு வெடிப்புக்கு பிறகு சற்று பின்நோக்கி சென்றுவிட்டது. கோவைக்கு வர வேண்டிய பல விஷயங்கள், ஹைதராபாத், பெங்களூருவுக்கு சென்றுவிட்டன. கோவை அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில், மத்திய அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
எனது சொந்த ஊரான கரூரைச் சேர்ந்த திமுகவினர் கோவையில் சுற்றி வருகின்றனர். அவர்களைப் பார்த்து, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் கொலுசு விநியோகிக்க வந்ததாக தெரிவித்தனர். அந்த கொலுசை கொண்டு சென்று ஆய்வகத்தில் பரிசோதித்தேன். அந்த ஆய்வகத்தில் அளித்த சான்றில், 16 சதவீதம் மட்டுமே வெள்ளி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கடையில் அளித்தால் ரூ.200-க்கு கூட வாங்கமாட்டார்கள். இது ரூ.3,800 மதிப்புடையது என்று கூறி விநியோகித்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறுவதுபோல, ஈயம் பூசுண மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோல உள்ளது இது.
இன்னொரு திமுக தம்பியை பார்த்தேன், அவர் பெரிய டப்பாவை தூக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, வீடு, வீடாக சென்று ஹாட் பாக்ஸ் அளிப்பதாக தெரிவித்தார்.
ஓங்கி அடித்தால், துண்டுகளாக உடைந்துவிடும்போல் இருக்கிறதே என்றேன். அவர், ஒவ்வொன்றையும் ரூ.100 மதிப்பில் டெல்லியில் இருந்து மொத்தமாக வாங்கி இறக்கியுள்ளோம் என்றார். இந்த கொலுசையும், டப்பாவையும் அளித்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றனர்.
திமுக எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் எங்களுக்கு வாக்களிக்கவில்லையெனில், பாஜக தமிழகத்துக்குள் வந்துவிடும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.பாஜக இங்கே உள்ளே வந்து பல காலம் ஆகிவிட்டது. மக்களின் எண்ணத்திலும், வீட்டிலும் எப்போதோ பாஜக வந்துவிட்டது" என்று அண்ணாமலை பேசினார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது, எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.