தஞ்சாவூர்: அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு திமுக வேட்பாளர் அனுசியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதியின் நேரு நகரை சேர்ந்த அனுசியா (56) என்பவர் திமுக. சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனுசியா இன்று காலையிலிருந்தே தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தார்.
வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்தனர்.
ஆனால், அனுசியா இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அனுசியா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.