சென்னை: சென்னை ராயபேட்டை, மயிலாப்பூர், திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ராயபேட்டையில் அவர் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் எந்த ஒரு மாற்றத் தையும் நாம் பார்க்கவில்லை. வாகன பேக்குவரத்து நெரிசல், மழை வரும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெள்ளம். எந்த ஒரு நலத்திட்டமும் ஊழல், லஞ்சமின்றி வருவதில்லை.
திமுக சார்பில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். குடும்ப தலைவிக்கு ரூ.1000 மாதம் கொடுப்பதாக அறிவித்தனர். தற்போது குடும்ப தலைவி யார் என்பதை தேடிக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்கள் எப்போது கண்டுபிடித்து, பணத்தை ஒதுக்குவார்கள். நகைக்கடன் முறைகேடு கண்டுபிடிப்பதாக கூறி, தற்போது 100-ல் 73 பேருக்கு தள்ளுபடி இல்லை என்று கூறி விட்டனர்.
மத்திய- மாநில அரசுக்கு இடையில் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் ஆட்சி செய்கிறார். பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது. பிரதமரின் திட்டங்களில் பயன்பெற்றவர்கள் ஆதரவு பெரிய அளவில் வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த 171 கோடி டோஸ் தடுப்பு மருந்து எந்த பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசு பொங்கல் தொகுப்பை கூட சரியாக கொடுக்கவில்லை. ரூ.10-க்கு விற்கப்படும் மஞ்சள் பையை தொகுப்பில் ரூ.60-க்கு வாங்கி ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர். முதல்வர் வெளியில் வந்து பிரச்சாரம் செய்யாமல், அறையில் இருந்து கணினி முன் பிரச்சாரம் செய்கிறார். வெளியில் வந்தால் வாக்குறுதி குறித்து மக்கள் கேட்பார்கள் என்று வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல, தி.நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, ‘‘பொங்கல் தொகுப்பு விவகாரம் சிபிஐ விசா ரணை வரை செல்லும்’’ என்றார்.