நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர், விழுப்புரம் மாவட்ட போலீஸாரை பொது இடத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் என 294 (பி), 504 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.