தமிழகம்

7 மாடிகளுடன் வைஃபை வசதி, நகரும் படிக்கட்டு, சிற்றுண்டியகம்- மதுரை கலைஞர் நூலக கட்டுமான பணி தீவிரம்

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னையில் 2010-ம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திறந்து வைத்தார். அனைத்து வசதிகளுடன் அமைந்த இந்த நூலகத்துக்கு ஆசியக் கண்டத்தில் இரண்டாவது மிகப் பெரிய நூலகம் என்ற பெருமை உண்டு. அதேநேரத்தில் தெற் காசியாவில் முதல் நூலகம் என்ற பெயரையும் தட்டிச் சென்றது.

அதுபோன்ற நூலகம் தங் கள் பகுதியில் அமையாதது தென்மாவட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய ஏக் கமாக இருந்தது. அதைத் தீர்த்து வைக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் முத் தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க 2021 ஜூன் 3-ல் உத்தரவிட்டு பின்னர் அடிக்கல் நாட்டினார்.

தற்போது இந்த நூலகத்துக்கான பிரம்மாண்ட கட்டிடம் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டிடப்பணிக்கு ரூ.99 கோடி, புத்தகங்கள் வாங்க ரூ.10 கோடி, கணினி உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடி என அரசு நிதி ஒதுக்கிப் பணிகள் தொடங்கி நடக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்திலும் சத்தமின்றி பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன.

அடித்தளம் மற்றும் ஏழு மாடிகள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக அமைகிறது. மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்புத் தோற்றம் கொண்டதாக அமையும், இந்த நூலகத்தில் இலவச வைஃபை வசதி, மூன்று நகரும் படிக்கட்டுகள், ஆறு மின் தூக்கிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.

மேலும், சுயமாகப் பரிமாறும் சிற்றுண்டியகம், மாநாட்டுக் கூடம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்கு, மாற்றுத் திறனாளிகளுக் காக தரைத் தளத்தில் பிரத்தியேகப் பிரிவு, பார்வையற்றோர், காது கேளாதோருக்கான மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள், 200 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி என மதுரையில் அதிநவீன நூலகம் பிரம்மாண்டமாக அமைகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) கூறியதாவது:

கலைஞர் நூலகக் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும்.

தமிழ் மொழி மற்றும் ஆங்கில நூல்கள், குழந்தை நூல்கள், கணிதம், கணினி அறிவியல், இயற் பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர்நுட்பவியல், நில வியல், உணவியல், உளவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, பயணம், வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல், 12,000 அரிய நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் என பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 2.50 லட்சம் நூல்கள் இடம்பெற உள்ளன.

போட்டி தேர்வுக்கு..

மாணவர்கள் பாடப் புத்தகங் களையோ வாசகர்கள் தங்கள் சொந்த நூல்களையோ கொண்டு வந்து படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென் றும் படிக்கலாம்.

வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து படிக்கலாம். பார்வையாளர்கள் உணவருந்த, பொருட்கள் வைக்க தனித்தனியே அறை உள்ளது.

கண்காணிப்பு கேமரா அமைப் பதால் பாதுகாப்பாகவும் இந்த நூலகத்தில் இருக்கலாம். இலவச வைஃபை வசதி இருப்பதால் நூல்கள் இல்லாமலேயே மடிக் கணினி அல்லது கைபேசி மூலம் படிக்கலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நூலகம் ஒரு வரமாக அமையும், என்றார்.

சுமார் 2.04 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்து அமையவிருக்கும் இந்த பிரம்மாண்ட நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு அறிவொளி வழங்கும் ஓர் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT